/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மின்கேபிள் பதிக்கும் பணியால் நகரை மிரட்டும் இருள்!மின்கேபிள் பதிக்கும் பணியால் நகரை மிரட்டும் இருள்!
மின்கேபிள் பதிக்கும் பணியால் நகரை மிரட்டும் இருள்!
மின்கேபிள் பதிக்கும் பணியால் நகரை மிரட்டும் இருள்!
மின்கேபிள் பதிக்கும் பணியால் நகரை மிரட்டும் இருள்!
கோவை: புதை மின் வடம் அமைக்கும் பணியால், கோவை நகரின் பல பகுதிகளில் நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டு, பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு மற்றும் காமராசர் ரோடுகளில், பூமிக்கடியில் மின் கேபிள்களைக் கொண்டு செல்ல, 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது தமிழக அரசு. புதை மின் வடம் அமைக்கும் பணியை, மின் வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் இறுதிக்குள் பணியை முடிக்க, மின்வாரியம் எவ் வளவோ முயற்சித்தும் இதுவரை இந்த பணி முடிக்கப்படவில்லை. இப்போதுதான் புதை மின் வடம் அமைக்கும் பணி முடிந்து, மின் இணைப்புகளை மாற்றித் தரும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணி துவக்கப்பட்ட நாளிலிருந்து, நான்கு மாதங்களாக கோவையின் பல்வேறு பகுதிகளில் வரைமுறையின்றி மின்சாரம் தடைபட்டுள்ளது. ஒரு சில நாட்களில், குறிப்பிட்ட பகுதியில் மின்தடை இருக்கும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆனால், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, பல மணி நேரம் கழித்தே மின்சாரம் வரும். அதேபோன்று, பல நாட்களில் எந்தவித முன்னறிவிப்புமின்றி, காலையிலிருந்து மாலை வரையிலும் மின்சாரம் தடைபட்டிருக்கும். இரவு நேரங்களிலும் பல இடங்களில் தடை நீடிக்கிறது. இதுபற்றி கேட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் முறையான பதில் கிடைக்காது.
ரேஸ்கோர்ஸ் பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு மற்றும் சுற்று வட்டார குடியிருப்புகளில், இரு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் பகல் முழுவதும் மின்சாரம் இருந்ததே இல்லை. நாளுக்கு நாள் நேரம் அதிகரித்து, கடந்த சில நாட்களாக இரவு நேரத்திலும் இந்த மின் தடை நீடிக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடும் வெயிலில், மின்விசிறி கூட இல்லாமலும், கிரைண்டர், மிக்ஸி மற்றும் பிரிட்ஜ் எதையும் பயன்படுத்த முடியாமலும் பொதுமக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாயினர். கம்ப்யூட்டர்களைப் பயன் படுத்த முடியாததாலும் பலரது அன்றாடப்பணியும் பாதிக்கப் படுகிறது. பல நேரங்களில், பொது மக்கள் பலரும் போன் செய்து புகார் செய்த பின்பே, மின்சாரம் வழங்குவதையும் மின் வாரியத்தினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
புதை மின் வடத்தில் இணைப்பு வழங்குவது, மின் பாதைகளை மாற்றி அமைப்பது என பல புதிய தொழில்நுட்பங்கள் மின்வாரியத்தினருக்குத் தெரியாததால்தான், பல பகுதிகளில் மின்சாரம் தடைபடுவதே தெரியாமலிருப்பதாக புகார் கூறப்படுகிறது. இந்த புகாரை மின்வாரிய பொறியாளர்கள் மறுக்கின்றனர்.
புதிய முறையில் மின் இணைப்பை மாற்றித் தரும் பணிக்கு, சம்மந்தப்பட்ட மின் நுகர்வோரின் ஒத்துழைப்பு இல்லை என்பது இவர்களின் புகாராகவுள்ளது. ஊடகங்கள் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏற்கனவே அறிவிப்பு கொடுத்தும், பெரும்பாலான மக்கள், தயார் நிலையில் இல்லை என கூறுகின்றனர். வழக்கு காரணமாக, ஒண்டிப்புதூர் ரயில்வே மேம்பாலத்துக்கு அருகில் இரு புறமும் உள்ள கட்டடங்களுக்கு அருகில் மட்டுமே புதை மின் வடம் அமைக்கப்படவில்லை என்றும், மற்ற இடங்களில் எல்லாம் இந்தப் பணி முடிந்து விட்டதாகவும் கூறுகின்றனர். மின்வாரிய தலைமைப் பொறியாளர் தங்கவேலு கூறுகையில், ""புதை மின் வடம் அமைக்கும் பணியும், மின் இணைப்புகளை மாற்றித் தரும் பணிமுடிவுக்கு வந்து விட்டது. ""இன்னும் ஓரிரு நாட்களில் எல்லா வேலையும் முடிந்து விடும். அதனால், இனிமேல் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படாது,'' என்றார்.